சென்னை உயர்நீதிமன்றத்தில், கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் தொடர்பான மனு விசாரணையின் போது, நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். “தொண்டர்கள், ரசிகர்கள், மக்களை அப்படியே விட்டுவிட்டு பொறுப்பற்ற முறையில் தவெக தலைவர் வெளியேறியுள்ளார். கரூர் நிகழ்ச்சியின் தலைவருக்கு தலைமைப் பண்பே இல்லை” என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கரூர் போன்ற கூட்ட நெரிசல் சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்கும் வகையில் அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ, பிரச்சார கூட்டங்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்க வேண்டும் எனக் கோரப்பட்டது. மேலும், விதிமுறைகள் மீறப்பட்டால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் சேர்த்து கட்சித் தலைவர், மேடையில் பேசியவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
விசாரணையின் போது, நடிகர் விஜய் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதாக வெளிவந்த வீடியோக்களை நீதிபதி சுட்டிக்காட்டி, “இதில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதா? ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? Hit and run வழக்குப் பதிவு செய்ய வேண்டியதல்லவா? இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர், மற்றவர்களுக்கு என்ன ஆனது?” என்று கடுமையாக கேள்வி எழுப்பினார்.
“கரூர் சம்பவத்தில் தொண்டர்களை கட்டுப்படுத்தாமல் விட்டது மட்டுமல்லாமல், தலைவரே நிகழ்ச்சியிலிருந்து விலகிச் சென்றுள்ளார். இதுபோன்ற சம்பவங்களில் பொறுப்பை தவிர்க்க முடியாது” எனவும் நீதிபதி தெரிவித்தார்.