சென்னை: புதிய குற்றவியல் சட்டத்தை எதிர்த்து ஜூலை 8ம் தேதி நீதிமன்றத்தை புறக்கணிக்க சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க கூட்டம் முடிவு செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர், இந்த 3 சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஜூலை 8-ஆம் தேதி ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் கூறியதாவது: பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக இந்த 3 சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்தச் சட்டங்களை அமல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும், இந்தி, சமஸ்கிருதத்தில் பெயர்களை மாற்றுவது குறித்தும் மத்திய அரசு வழக்கறிஞர்கள் சங்கங்கள் உள்ளிட்ட யாருக்கும் தெரிவிக்கவில்லை.
ஏற்கனவே, நாடு முழுவதும் 4 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த சூழ்நிலையில், இந்த புதிய சட்டங்களை அமல்படுத்துவது வழக்குகளின் தேக்கத்தை அதிகரிக்கும். எனவே, இந்த சட்டங்களை அமல்படுத்தக்கூடாது, தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்பதே வழக்கறிஞர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது. இதை வலியுறுத்தி ஜூலை 8-ம் தேதி (திங்கட்கிழமை) உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.