கரூர் மற்றும் கோவையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதனை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இந்த தேவையை நன்கு புரிந்து, ஆய்வுகள் நடத்தி, பணிகளை துவக்கியுள்ளது.
இந்த மிகப்பெரிய பணிக்காக ரூ.137 கோடி ஒதுக்கீடு சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கரூர் அருகே உள்ள கோவிந்தம்மாளையத்தில் இருந்து கரூர் மாவட்ட எல்லை வரையிலான சாலை தற்போது 26 மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
மழை மற்றும் கழிவுநீர் கால்வாய்களை அகலப்படுத்தும் பணியும் பெரிய அளவில் நடந்து வருகிறது. இதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
சாக்கடைகள் சீரமைக்கும் பணி முறையாக மேற்கொள்ளப்பட்டு 18 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
பயணிகளின் போக்குவரத்தை மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் இந்த நான்கு வழிச்சாலை விரிவாக்கம் பெரும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.