கரூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் நடிகர் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு, மதியழகன் தனது செல்போனை அணைத்து கொண்டு மறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

விஜய் பிரச்சாரம் நடைபெற்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததில் முக்கிய பங்கு வகித்த மதியழகன், இந்தச் சம்பவத்தில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் பிறரும் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். தற்போது இவர்களின் இருப்பிடத்தை கண்டறிய போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவால் விசாரணை நடத்த வேண்டும் என்று தவெக சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், விஜய் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீதிமன்றத்தில் இடைக்கால மனுவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மின்தடை காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக வந்த குற்றச்சாட்டுகளை போலீசும் மின்வாரியமும் மறுத்துள்ளன. நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட ஜெனரேட்டர்களும் ஃபோகஸ் லைட்களும் கூட்ட நெரிசலால் செயலிழந்ததாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தொடரும் நிலையில், மதியழகனை கைது செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.