நிலம் வாங்குவது வாழ்க்கையின் முக்கியமான தீர்மானங்களில் ஒன்று. அதற்காக எழுதப்படும் முக்கிய ஆவணம் தான் கிரையப் பத்திரம். இது, ஒரு நிலத்தை பணம் கொடுத்து வாங்குவதை உறுதி செய்யும் சட்டப்பூர்வமான ஆவணம். இந்த ஆவணத்தில், விற்பவர் மற்றும் வாங்குபவரின் விவரங்கள், சொத்து பற்றிய முழுமையான விவரங்கள், சட்டப்பூர்வ ஆதாரங்கள் ஆகியவை அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும். சாட்சிகள் முன்னிலையில், சார் பதிவாளர் அலுவலகத்தில் இந்த பத்திரம் பதிவு செய்யப்படுகிறது.

கிரைய பத்திரம் தயார் செய்யும்போது சில அடிப்படை விஷயங்களை தவறவிடக்கூடாது. முக்கியமாக, விற்பவருக்கு சொத்து எங்கு இருந்து வந்தது? அவர் பெற்ற பத்திர விவரங்கள் என்ன? முன் பத்திர விவரங்கள், பட்டா, மின் இணைப்பு, அடையாள அட்டை போன்றவை பத்திரத்துடன் ஒப்பிடப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும். வாங்குபவரின் பெயர், முகவரி, சான்றுகள் போன்றவை சரியாக உள்ளதா என்பதையும் உறுதிசெய்ய வேண்டும். தவறான தகவல்கள் பின்னர் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
முத்திரைத் தாள்கள் சரியானவையாக இருக்க வேண்டும். பட்டா எண், சர்வே நம்பர், சொத்து அளவுகள், தெரு, கதவு எண், பொதுப் பயன்பாட்டு உரிமைகள் உள்ளிட்டவை தெளிவாக பதிவாக வேண்டும். பத்திரத்தின் அனைத்து பக்கங்களிலும் இருவரின் கையொப்பம், சாட்சிகளின் கையெழுத்தும் முகவரியுடன் இருக்க வேண்டியது கட்டாயம். வங்கியின் டிடி சரிபார்க்கப்பட்டதா? என்ற விவரமும் கவனிக்கப்பட வேண்டும். மெட்ரிக் அளவில் சொத்து விவரங்களை எழுதுவது பட்டா மாற்றத்தில் உதவியாக இருக்கும்.
பத்திரம் எழுதும் பணியில் அனுபவம் வாய்ந்த ஆவண எழுத்தர் தேர்வு முக்கியம். அவர்கள் வழிகாட்டுதலுடன் எழுதிய பத்திரங்கள், சட்ட ரீதியாக வன்மையற்றவையாகவும், தெளிவாகவும் இருக்கும். வழக்கறிஞரின் ஆலோசனையும் தேவையான இடங்களில் பெறலாம். ஆனால், வழக்கறிஞரே ஆவண எழுத்தராக செயல்படும்போது நடைமுறையில் சிக்கலான சூழ்நிலைகள் உருவாகலாம். எனவே, உரிய அனுமதியுடன் செயல்படும் ஆவண எழுத்தர்களை தேர்வு செய்வது அவசியம் என சார் பதிவாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.