ஊட்டி: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே, கோடநாடு பகுதியில், ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களாவில், வாட்ச்மேன் கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு, ஊட்டியில் உள்ள, மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபால், கனகராஜின் மனைவி, மைத்துனர், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உள்ளிட்ட 316 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு உதகையில் உள்ள மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் போலீசார், சிறப்பு வக்கீல்கள், கனகராஜ் ஆகியோர் விசாரணைக்கு வந்தனர். குற்றவாளிகள் தரப்பில் சயன், வாளையார் மனோஜ் ஆஜராகினர். விசாரணை நடந்து வருவதால் கால அவகாசம் தேவை என சிபிசிஐடி தெரிவித்துள்ளது. கால அவகாசம் கோரியதால் விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி லிங்கம் உத்தரவிட்டார்.