திருவள்ளூர்: சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் கடந்த 19-ம் தேதி தமிழக எல்லையை வந்தடைந்தது.
சென்னையின் குடிநீர் தேவைக்காக, தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ், ஆந்திர அரசு கிருஷ்ணா நதிநீரை 12 டிஎம்சியும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் வழங்க வேண்டும்.
இதன்மூலம், சென்னையின் குடிநீருக்காக ஜூலை முதல் அக்டோபர் வரை வழங்க வேண்டிய கிருஷ்ணா நீரை வழங்கக் கோரி கடந்த ஜூலை முதல் வாரத்தில் ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு ஆந்திர அரசு கடிதம் எழுதியுள்ளது.
அதன்படி, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து, தெலுங்கு – கங்கை திட்ட கால்வாய் மூலம், வினாடிக்கு, 1,200 கன அடி கிருஷ்ணா நீரை, கடந்த, 19-ம் தேதி காலை, 11 மணிக்கு, ஆந்திர மாநிலம் – வெங்கடகிரி எம்எல்ஏ ராமகிருஷ்ணா திறந்து வைத்தார்.
கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் 152 கி.மீ., தூரம் பயணித்து தமிழக எல்லையான திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்ட் பகுதிக்கு இன்று காலை வந்து சேர்ந்தது.
வினாடிக்கு 195 கன அடி வீதம் வந்த கிருஷ்ணா நீரை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன், திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர்.
தமிழக எல்லையை வந்தடைந்த கிருஷ்ணா நீர், 25 கி.மீ., தூரம் பயணித்து இன்று இரவு அல்லது நாளை காலை பூண்டி ஏரியை வந்தடையும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.