சென்னை: 49-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் கண்காட்சி சென்னை தீவில் ஜனவரி 6 முதல் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய மற்றும் மாநில அரசு அரங்குகள் மற்றும் தனியார் துறை அரங்குகள் உட்பட 84 அரங்குகள் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் பிரமாண்டமான பொழுதுபோக்கு வளாகம் அமைக்கப்பட்டு அதில் ராட்சத சாகச விளையாட்டு உபகரணங்கள், நவீன பொழுதுபோக்கு, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் போன்றவை உள்ளன.
குழந்தைகளுக்கான ரயில், பனி உலகம், அவதார் உலகம், சாஃப்ட் ஷோ, திகிலூட்டும் பேய் வீடு, 3-டி சினிமா, அறிவியல் உலகம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்துள்ளன. வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கண்காட்சியைப் பார்க்கலாம்.
வரிசையில் நிற்க முடியாதவர்கள் UPI கட்டண முறையில் பணம் செலுத்தி நுழைவுச் சீட்டுகளை எளிதாகப் பெறலாம். கண்காட்சியை பார்வையிட வரும் பொதுமக்களின் வசதிக்காக சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கண்காட்சியை காண சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து மக்கள் ஆர்வத்துடன் வருகின்றனர். இந்தக் கண்காட்சியை ஜனவரி 21-ம் தேதி வரை குழந்தைகள், பெரியவர்கள் உட்பட ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 377 பேர் பார்வையிட்டுள்ளதாக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.