திருவிடைமருதூர்: திருவிடைமருதூர் துணை காவல்துறை கண்காணிப்பாளர் ராஜு பணியிடம் மாற்றம் செய்யக்கோரி திருவிடைமருதூர் துணை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம். நடத்தினர்.
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் துணை காவல்துறை கண்காணிப்பாளராக இருந்து வரும் ஜி. கே. ராஜு பணியேற்றதிலிருந்து தற்போது வரை டிஎஸ்பி அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் மனுதாரர்களையும், அவர்களுக்கு உறுதுணையாக வரும் வழக்கறிஞர்களையும் தொடர்ந்து ஒருமையில் பேசி அவமானப்படுத்தி, அலட்சியப்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த மாதம் வழக்கறிஞர் தமிழ்செல்வம் என்பவரையும், தற்போது வழக்கறிஞர் தட்சிணாமூர்த்தி என்பவரையும் தரக்குறைவாக பேசுவதுடன் அவர்களை அவமானப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் பணி புறக்கணிப்பு செய்து, திருவிடைமருதூர் துணை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் திருவிடைமருதூர் டிஎஸ்பி ராஜுவை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும், இல்லையெனில் டெல்டா மாவட்டத்தில் உள்ள வழக்கறிஞர்களை ஒன்றுதிரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் எனவும் கூறினர்.