சென்னை: வடசென்னையில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு டாக்டர் வீராசாமி எம்.பி கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- கொரோனா தொற்று பரவுவதற்கு முன்பு, மணலி புதுநகர் பகுதியில் இருந்து வழித்தட எண் 28-ஏ, 121-டி, 56-ஜே ஆகிய பேருந்துகள் இயக்கப்பட்டன.

இது வேலைக்குச் செல்லும் பொதுமக்கள், மருத்துவமனைகளுக்குச் செல்பவர்கள் உட்பட அத்தியாவசியப் பயணங்களில் இருந்த அனைவருக்கும் வசதியாக இருந்தது. தற்போது இந்த பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனுடன், திருவொற்றியூர், எண்ணூர், தண்டையார்பேட்டை பணிமனைகளில் இருந்து நிறுத்தப்பட்டுள்ள பேருந்து சேவைகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.