தஞ்சாவூா்: ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அனைத்து ஊர்ப்புற நூலகங்களையும் தரம் உயர்த்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மண்டலம் சார்பில் கவனஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு இன்று தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை ஊர்ப்புற நூலகர்கள் தஞ்சை மண்டலம் சார்பில் (தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர்) கவனஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ப. வெங்கடேசன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கலையரசி, டேவிட், இளவரசன், ஜோதிராஜன், சங்கீதா, வீரசெல்வன், குமரன், சுசீலா, தீபா, அன்பழகன், தனசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தப் போராட்டத்தில், தி.மு.க தேர்தல் அறிக்கை வரிசை எண் .178-ல் கூறியபடி ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அனைத்து ஊர்ப்புற நூலகங்களையும் தரம் உயர்த்த வேண்டும் , 10 ஆண்டுகள் பணி முடித்த ஊர்ப்புற நூலகர்களுக்கு தேர்வு நிலை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.
கோரிக்கைகளை உடனே நிறைவேற்றாவிட்டால் சென்னையில் பள்ளி கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தனர். இந்தப் போராட்டத்தில் தஞ்சை மண்டலத்தை சேர்ந்த ஏராளமான ஊர்ப்புற நூலகர்கள் கலந்து கொண்டனர்.