சென்னை: ”தமிழகத்தில் நாட்டு படகு உரிமையாளர்களுக்கு, மானிய விலையில், லைப் ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன,” என, மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 10,000 நாட்டுப் படகு உரிமையாளர்கள் பயனடைவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து, மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கடலில் மீன்பிடிக்கும்போது, இயற்கை சீற்றங்களிலோ, விபத்துகளிலோ மீனவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதை தவிர்க்க படகில் செல்லும் அனைவரும் கட்டாயம் லைப் ஜாக்கெட் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நடப்பு நிதியாண்டில் 40,000 லைப் ஜாக்கெட்டுகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இவற்றைப் பெற பதிவு செய்யப்பட்ட நாட்டுப்படகு உரிமையாளர்கள் அந்தந்த மாவட்ட மீன்வளத்துறை அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு படகுக்கு 4 லைஃப் ஜாக்கெட்டுகள் வழங்கப்படும். ஒன்றின் விலை ரூ. 2,472. இதில் 75 சதவீதம் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 10,000 நாட்டுப் படகு உரிமையாளர்கள் பயனடைவார்கள். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.