May 23, 2024

சிங்கத்தின் வாழ்க்கை முறை

சென்னை : சிங்கம் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். மாமிசம் உண்ணும் விலங்கு வகை. தமிழில் ஆண் சிங்கத்தை அரிமா என்பார்கள். குற்றாலக் குறவஞ்சியில் ஆளி என்ற சொல்லையும் அரிமாக்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. கழுத்தில் பிடரி இருப்பது சிறப்பாகும். பிடரியை உளை என்றும் உளை மயிர் என்றும் கூறுவதுண்டு.

சிங்கம் பூனைப் பேரினத்தைச் சேர்ந்தது. பூனைப் பேரினத்திலேயே, புலிக்கு அடுத்தாற்போல இருக்கும் பெரிய விலங்கு என்றால் அது சிங்கம்தான். ஆண் சிங்கம் 150-250 கிலோ வரை எடை இருக்கும். இருக்கும். பெண் சிங்கம் 120-150 கிலோ எடை இருக்கும்.

ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள காடுகளில் மட்டுமே சிங்கம் காணப்படுகிறது. இந்தியாவில் உள்ள கிர் காட்டில்தான் ஆசிய சிங்கங்கள் வாழ்கிறது. ஆசிய கண்டத்திலேயே இந்த காட்டில்தான் சிங்கம் இருக்கிறது. மற்ற அனைத்தும் ஆப்ரிக்க கண்டத்தில் தான் உள்ளன. இந்த கிர் காடு குஜராத் மாநிலத்தில் உள்ளது. ஆப்ரிக்க சிங்கங்களைப் போல் பார்க்க பெரிதாகவும், பிடரி முடி அதிகமாகவும் இருக்காது. இந்த காட்டில் தேக்கு மரங்கள் சூழ சிங்கங்கள் வாழும் ஒரு சின்னகோட்டையாகவே இந்த கிர் காடு இருக்கிறது.

சிங்கங்கள் 12 ஆண்டுகள் முதல் 16 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. சிங்கங்கள் கூட்டமாகவே வாழ்கின்றன. அவற்றின் குழுக்களில், 15 முதல் 40 சிங்கங்கள் வரை இருக்கும். இதில் குட்டிகளும், பெண் சிங்கங்களும் தான் அதிகம். அனைத்தையும் தலைமை தாங்க ஒரு ஆண் சிங்கம் மட்டுமே இருக்கும். வேட்டையாடும் திறனுடைய ஆண் சிங்கங்கள் குழுவில் இருந்து விரட்டி அடிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குட்டிகளாக இருக்கும் போது ஆண் சிங்கம் விரட்டியடிக்கப்படுகிறது. அந்த சிங்கங்கள் தனக்கான ஆட்சியைப் பிடிக்க வேண்டும். இதனால் மற்ற சிங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் எல்லையைக் கைப்பற்ற முயற்சிக்கும். அதில், இரண்டு ஆண் சிங்கங்களுக்கு இடையே பெரும் சண்டையே ஏற்படும். ஏதாவது ஒன்றுதான் உயிருடன் இருக்கும். மற்றொன்று கொல்லப்படும். இப்படி கைப்பற்றிய தனது எல்லையைச் சிங்கங்கள் நகத்தால் குறிக்கும். ஆண் சிங்கங்களை நம்பியே அந்த கூட்டத்தில் பல பெண் சிங்கங்களும் இருக்கும்.

சிங்கங்கள் தினமும் தண்ணீர் அருந்துவதில்லை என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. அவற்றுக்குத் தண்ணீர் அருந்த வேண்டிய அவசியமும் இல்லை. தினமும் உணவு உண்ண வேண்டும். வயது வந்த பெண் சிங்கம் நாள் ஒன்றுக்குச் சராசரியாக 4 கிலோ அளவு உணவை சாப்பிடுகிறது. ஒரு ஆண் சிங்கம், நாள் ஒன்றுக்குச் சராசரியாக 7 கிலோ உணவு உட்கொள்ளும். வரிக்குதிரை, எருமை போன்ற தாவரங்களை உண்ணும் பெரிய விலங்குகளையே சிங்கங்கள் தங்களுக்கு உணவாக்கி கொள்கின்றன. சில நேரங்களில் சிறுத்தை, சிறுத்தைப்புலி போன்றவை கூட சிங்கங்களுக்கு இரையாகி விடும்.

சிங்கங்களின், பார்வை மனிதர்களை விட ஆறுமடங்கு சிறந்தது. இதனால் இரவிலும் வேட்டையாடுகின்றன. அதேபோல், சிங்கத்தின் நகங்கள் ஒன்றரை அங்குலம் வரை நீளமாக இருக்கும். சிங்கங்கள் ஒரு மணி நேரத்தில் 50 மைல் தூரத்தைக் கடக்குமளவு ஓடக்கூடியவை. சிங்கத்தால் 36 அடி நீளம் அளவில் குதிக்க முடியும். எனவே சிங்கம் வேட்டையாடுவதில் சிறந்ததாக இருக்கிறது.

பொதுவாகச் சிங்கங்கள் அடர்ந்த காடுகளில் வாழ்கின்றன என்று கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் உண்மையில் சிங்கங்கள் அடர்ந்த காடுகளில் வாழ்வதில்லை. நிலப்பரப்பிலேயே, புல்வெளிகள் அதிகம் உள்ள பகுதிகளிலேயே அதிகம் வாழ்கின்றன.

சிங்கங்களில் வேட்டையாடுபவை பெண் சிங்கங்களே. ஆண் சிங்கங்கள் அவற்றைப் பாதுகாக்கும் பணியையே செய்கின்றன. 85 முதல் 90 சதவீதம் பெண் சிங்கங்களே வேட்டையாடுகின்றன. பெண் சிங்கங்களால் வேட்டையாடப்படும் உணவை அந்த குழுவில் உள்ள தலைமை தாங்கும் ஆண் சிங்கம்தான் முதலில் உண்ணும். அதன் பின் மற்ற சிங்கங்கள் சாப்பிடுகின்றன. ஆண் சிங்கம் தனது எல்லையைப் பாதுகாப்பது, தனது குழுவில் உள்ள மற்ற சிங்கங்களைப் பாதுகாப்பது போன்ற பணிகளை மட்டும் செய்கிறது.

சிங்கம் அதன் சகோதரி, தாய், மகளுடன் உறவு கொள்வதில்லை. அவை மனைவி என்று ஏற்றுக்கொள்ளும் பெண் சிங்கங்களுடன் மட்டுமே உறவு கொள்கின்றன. தனது ரத்த உறவை வாசனை மூலம் கண்டறிந்து விடுகின்றன.

சிங்கத்தின் கர்ஜனை 5 மைல் தொலைவு வரை கேட்க முடியும். இது மற்ற விலங்குகளிடம் இருந்து சிங்கத்தைத் தனித்துவமாக அடையாளப்படுத்துகிறது. சிங்கம் கர்ஜிப்பதன் மூலம் மற்ற சிங்கங்களிடம் தொடர்பு கொள்கிறது. அதேபோல் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சிங்கங்கள், வாசனை மூலம் அடையாளம் காண்கின்றன. அதற்கு அடையாளமாகத் தலையில் ஒன்றுக்கொன்று நாக்கால் தடவிக்கொள்ளும்.

சிங்கங்கள் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை குட்டிகளை போடும். நான்கு மாதங்கள் கருவைச் சுமக்கும். குட்டியை ஈன்றெடுக்கும் முன் தண்ணீருக்கு அருகில் பாதுகாப்பான இடங்களைப் பெண் சிங்கங்கள் தேர்ந்தெடுக்கும். ஒரு பிரசவத்தில் இரண்டிலிருந்து ஐந்து குட்டிகள் வரை பெண் சிங்கங்கள் ஈன்றெடுக்கின்றன.

குட்டிகள் 6 நாட்களுக்குப் பின் தான் கண்விழிக்கும் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அதுமட்டுமல்ல 1 ஆண்டுக்குப் பின்னரே பற்கள் முளைக்கின்றன. இதனால் அத்தனை நாட்களும், அவை தாயின் அரவணைப்பிலேயே இருக்கும். குட்டிகளை வளர்ப்பதில், ஆண் சிங்கங்கள் பொறுப்பேற்பதில்லை. ஆனால், மற்ற விலங்குகளிடம் இருந்து குட்டிகளைப் பாதுகாப்பதில் ஆண் சிங்கங்களின் பங்கு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!