சென்னை: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வில் (நேர்காணல் பதவிகள்) நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங்கிற்கான 2-வது கட்ட பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது குறித்து, டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டாளர் அ. ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:- ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வில் (நேர்காணல் பதவிகள்) சேர்க்கப்பட்டுள்ள பதவிகளுக்கான 2-வது கட்ட நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வு ஆணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

துணை மேலாளர் (பாதுகாப்பு), உதவி பொது மேலாளர் (நிதி), கணக்கு அதிகாரி, மேலாளர் (கிரேடு-3), மூத்த அதிகாரி (நிதி), மேலாளர் (மெக்கானிக்கல்), மேலாளர் (மின்சாரம்), துணை மேலாளர் (பொருட்கள்), உதவி மேலாளர் (சந்தைப்படுத்தல்) ஆகிய பதவிகள் இதில் அடங்கும். மேலும், ஒருங்கிணைந்த குரூப்-1 தேர்வில், கடந்த ஆண்டு டிசம்பர் 10 முதல் 13 வரை கணினி மூலம் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டது. அந்தத் தேர்வில் காலியாக உள்ள பதவியை நிரப்புவதற்கான 2-வது கட்ட நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.