குறிச்சி: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே குறிச்சி கிராமத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் கலந்து கொண்டு, 9 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம், மொத்தம் ரூ.27 லட்சம் கடனுதவி வழங்கிப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “ஆண்களை விட பெண்கள் நாணயமானவர்கள். கடன் வாங்கினால் ஏனோ, தானோ என இல்லாமல், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற அக்கறை உடையவர்கள்.
நுண்கடன் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று, அதிக வட்டி செலுத்துவதை விட, அரசின் கூட்டுறவுத்துறை வங்கிகளில் கடன் பெற்று, அதனை முறையாக திருப்பி செலுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும்.
முறையாக கடனைத் திருப்பிச் செலுத்தும் போது, மீண்டும் அதைவிட கூடுதலாக கடன் பெறலாம். கிராமப்புற பெண்கள் தங்கள் சொந்த கால்களில் நின்று வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களால் கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் இன்றைக்கு பலருடைய வாழ்வில் ஒளி ஏற்றி உள்ளது” என்றார்.
நிகழ்ச்சியில், அட்மா குழு தலைவரும், திமுக பேராவூரணி வடக்கு ஒன்றியச் செயலாளருமான இரா.பன்னீர்செல்வம், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அலிவலம் அ.மூர்த்தி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் நவநீதம் ஆறுமுகம், கூட்டுறவு சார்பதிவாளர்கள் ரமேஷ் (பேராவூரணி), அ.மாதவமணி (பட்டுக்கோட்டை), உதவி கள மேலாளர் பிரவீன் குமார் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சிவ.ரவிச்சந்திரன் வரவேற்றார். நிறைவாக, லலிதா தியாகராஜன் நன்றி கூறினார்.