தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.யுவராஜ் கூறியதாவது:- தமிழகத்தில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகள் இருப்பதாக சட்டப் பேரவையில் தெரிவிக்கப்பட்டது. காலாவதியான சுங்கச்சாவடிகளில் பராமரிப்புக் கட்டணமாக ரூ.40 வசூலிக்க வேண்டும். அந்த விதியை மத்திய அரசு சமீபத்தில் திரும்பப் பெற்றது. இங்கு எவ்வித பராமரிப்பு பணிகளும் நடைபெறவில்லை, அடிப்படை வசதிகள் இல்லை.
இருப்பினும், காலாவதியான சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி கடந்த 1-ம் தேதி முதல் மீண்டும் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வானகரம் சுங்கச்சாவடியில் போராட்டம் நடத்த உள்ளோம். இதேபோல், மாநிலம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தித் திணிப்பு, நாடாளுமன்ற எல்லை நிர்ணய விவகாரங்களில் தமிழக அரசு கவனம் செலுத்தியது போல் சுங்கச்சாவடி பிரச்னையிலும் கவனம் செலுத்தி மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். சுங்கச்சாவடி கட்டண உயர்வை எதிர்த்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அ.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு கட்டண உயர்வை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மக்கள் பாதிக்கப்படாத வகையில் சுங்கச்சாவடி உயர்வை தவிர்க்க தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்’’ என்றார்.