சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே காவலாளி அஜித் குமார் போலீசாரால் விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் கண்டனத்தை ஏற்படுத்தியது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) போராட்டம் நடத்த அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ், தவெக போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்படவில்லை எனத் தெளிவுபடுத்தினார்.

போராட்டத்திற்கு அனுமதி கோரிய இடத்தில் ஏற்கனவே மற்றொரு நிகழ்வு இருந்ததாலேயே, அந்த நாளில் அனுமதி வழங்க முடியாமல் போயிருந்தது. ஆனால், அதை காவல்துறை மறுத்ததாக தவறாகப் பரப்பியதாக அருண் ஐபிஎஸ் கூறினார். “எந்தக் கட்சிக்கும் நாம் விதிமுறைகளைச் சரியாகவே பின்பற்றி அனுமதி அளிக்கிறோம். தவெகவும் இதே விதியில் தான் வந்துள்ளது. அவர்களே நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றிருக்கிறார்கள். அதற்கு நாங்கள் மறுப்பு சொன்னதில்லை,” என்றார்.
தவெக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, அனுமதி வழங்குமாறு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, சென்னை தூர்தர்ஷன் அலுவலகம் அருகே உள்ள சிவானந்தா சாலையில் நடைபெறும் போராட்டத்திற்கு அதிகாரப்பூர்வமாக காவல்துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடரும் சர்ச்சைகள் மத்தியில், இந்த போராட்டம் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.
தவெக போராட்டத்தில் தொண்டர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகர் விஜய் இதில் நேரடியாக பங்கேற்க உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. நாளை காலை 10 மணிக்கு அவர் தலைமையில் இந்த கண்டனப் பேரணி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது அரசியல் நகர்வில் முக்கியமான படியாகவே பார்க்கப்படுகிறது.