சென்னை: சென்னை இஸ்கான் கோவிலில் மதுர மஹோத்ஸவ கீர்த்தனை விழா வெகு விமரிசையாக நடந்தது. 3 நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சென்னையின் கிழக்கு கடற்கரையில் புகழ்பெற்ற இஸ்கான் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 3 ஆண்டுகளாக மதுரா மஹோத்ஸவ கீர்த்தனை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டுக்கான மதுரா மஹோத்ஸவ கீர்த்தனை விழா கடந்த 17-ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. சென்னை இஸ்கான் கோவிலில் மதுர மஹோத்ஸவ கீர்த்தனை விழா 3 நாட்கள் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. இதில், புகழ்பெற்ற கீர்த்தனைகள் பாடப்பட்டன. 3 நாட்களும் தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பிரபல கீர்த்தனை பாடகர்கள் தலைமையில் கிருஷ்ண நாமங்கள் பாடப்பட்டன.
மேலும், மூத்த துறவிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் இந்த கீர்த்தனை விழாவில் கிருஷ்ணரின் புனித நாமங்களையும் ஆன்மீக பாடல்களையும் பாடினர். 3 நாள் திருவிழாவில் குழந்தைகள், சிறுவர், சிறுமிகள், முதியோர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் பங்கேற்று கீர்த்தனைகள் பாடி நடனமாடி விழாவை கொண்டாடினர். மேலும், கோவிலில் பிரசாதம் தயாரிக்கப்பட்டு, நாள் முழுவதும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.