கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் நீண்ட கால கனவாக இருந்து வருகிறது. ஆனால் இந்த திட்டங்களுக்கான இறுதி திட்ட அறிக்கை (DPR) இன்னும் மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. கோயம்புத்தூர் மெட்ரோவின் இரண்டு முக்கிய வழித்தடங்கள் சுமார் 40 கிலோமீட்டர் தூரம் கொண்டதாகவும், இதற்கான மொத்த செலவு ரூ.10,740 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்கடம் பேருந்து நிலையம் முதல் விமான நிலையம் வரை, மற்றும் கோயம்புத்தூர் சந்திப்பு முதல் வாலியம்பாளையம் வரை செல்லும் பாதைகள் இந்த திட்டத்தில் அடங்கும்.

டெக்ஸ் டூல்ஸ் பாலம் முதல் சூரியா மருத்துவமனை வரை உள்ள 1.4 கி.மீ தூரம் மிகவும் நெரிசலான பகுதியாக இருப்பதால், அவசர நிலத் திட்ட அட்டவணை (LPS) திருத்தப்பட்டு 20 மீட்டர் அகலத்திலிருந்து 30 மீட்டர் வரை விரிவாக்கப்பட்டது. இதனால், நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் மெட்ரோ பணிகளுக்கு தனியார் நிலமும், அரசு நிலமும் தேவைப்படுகிறது. மொத்தமாக 40 கி.மீ தூரத்திற்கு நிலத் திட்டம் (LPS) நிறைவடைந்து, நிர்வாக ஒப்புதலுக்காக சி.எம்.ஆர்.எல்.க்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை மெட்ரோ திட்டமும் அதேநேரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ளதைப்போன்று மதுரையிலும் 3 பெட்டிகளுடன் மெட்ரோ இயங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை நகரின் முக்கிய பகுதிகளை கடந்து செல்லும் இந்த பாதை, சுமார் 5 கி.மீ தூரம் Underground System ஆக சுரங்கப்பாதையில் இயங்கும். குறிப்பாக கோவில் பகுதிகள் மற்றும் நகரின் மையப்பகுதிகள் சுரங்கமாக அமைக்கப்பட உள்ளன.
மொத்தம் 20 ஸ்டாப்கள் கொண்ட மதுரை மெட்ரோ பாதையில், சிம்மக்கல் மற்றும் தெற்குவாசல் வழியாக இரண்டு பிரிவுகள் செல்லும். இதன் மூலம், பயணிகள் தேவைக்கேற்ப பாதையை மாற்றிக் கொள்ள முடியும். 2027க்குள் இந்த திட்டம் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டாலும், மத்திய அரசின் ஒப்புதல் தாமதம் திட்ட முன்னேற்றத்தை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. மக்கள் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த மெட்ரோ திட்டங்கள் விரைவில் அனுமதி பெற்று நடைமுறைக்கு வரும் என நகர மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.