தஞ்சாவூர்: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கைவிட வேண்டும். இதனால் 30 சதவீதம் பேரை நீக்க வாய்ப்பு உள்ளது என்று தஞ்சையில் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
தஞ்சையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இந்த திட்டத்தால் பல லட்சம் வாக்காளர்கள் நீக்க வாய்ப்பு உள்ளது. பொதுவாக இறந்தவர்கள் பெயர்களை நீக்குதல் , புதிய தகுதியான வாக்காளர்களை சேர்த்தல் போன்ற பணிகளை தான் தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும். ஆனால் இந்த சிறப்பு திருத்த வாக்காளர் திட்டத்தின் மூலம் உண்மையான வாக்காளர்களை கூட அதாவது 30 சதவீத வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க வாய்ப்பு உள்ளது.
எனவே தான் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று பெரும்பாலான அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்திலும் இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை முதலமைச்சர் கூட்டினார். இந்தத் திட்டத்தை எதிர்த்து கண்டன இயக்கம், கூட்டம் நடத்த வேண்டும் .
டெல்டாவில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டது ஒருபுறம் மகிழ்ச்சி என்றாலும் கொள்முதல் விஷயத்தில் போதுமான முன்னேற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்யவில்லை. ஏனென்றால் அதிக சாகுபடி செய்யப்பட்டதால் விளைச்சல் அதிகரித்து கொள்முதலும் அதிகம் செய்ய வேண்டும். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு கொள்முதல் விஷயத்தில் போதிய முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு செய்யாததால் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும். இது தொடர்பாக மத்திய குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளனர். ஆனால் மத்திய அரசிடம் இருந்து ஈரப்பதம் தொடர்பான அறிவிப்பு இதுவரை வரவில்லை. அறிவிப்பு வருவதற்குள் குறுவை கொள்முதலே முடிந்துவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.