“மனிதர்களின் உடல் மற்றும் மனம் மிகவும் சிக்கலானவை. அவற்றை சரியாக கையாள தவறினால், நல்வாழ்வு சாத்தியமாகாது” என ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் மகா சிவராத்திரி விழாவில் கருத்து தெரிவித்துள்ளார்.
கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் சத்குரு பேசினார். “இந்த விழா மதம், இனம், மொழி என எந்தப் பிரிவுக்கும் உட்பட்டது இல்லை. இது அனைத்து மனிதர்களுக்கும் உரியது. ஒரு பத்திரிகையாளர் என்னிடம், ‘நான் இஸ்லாமியராகவோ, கிறிஸ்தவராகவோ இருந்தால், இந்த விழாவில் பங்கேற்கலாமா?’ என்று கேட்டார். நான் பதிலளிக்கும்போது, ‘இங்கு எந்த மதத்திற்கும் தனி அனுமதி இல்லை. இந்துக்களுக்கும் தனி அனுமதி இல்லை. மனிதர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது’ என்று கூறினேன்” என்றார்.
ஆதியோகி சிலையின் முக்கியத்துவத்தையும் அவர் விளக்கினார். “மகா சிவராத்திரி என்பது கடந்த காலத்தை நினைவுகூர்வதற்காக அல்ல. எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகவே ஆதியோகி சிலை நிறுவப்பட்டுள்ளது. மனிதர்களாக பிறந்த அனைவரும், யோக அறிவியலை உணர்ந்து நலமாக வாழ வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
அதேநேரம், மகா சிவராத்திரி இரவில் யோகா மற்றும் ஆன்மீக சாதனைகளின் முக்கியத்துவத்தை விளக்கினார். “ஒரு நாட்டில் சட்டம், ஒழுங்கு, இறையாண்மை சரியாக இல்லாவிட்டால், கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் வளர்ச்சி எவ்வளவு நடந்தாலும் பயனில்லை” என்றார்.
மகா சிவராத்திரி விழா உலகளவில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இது அனைத்து மக்களுக்கும் தியானம், யோகா, ஆன்மீக விழிப்புணர்வுக்கான சிறப்பான சந்தர்ப்பமாக இருப்பதாக சத்குரு கருத்து தெரிவித்தார்.