சென்னை: மலேசியாவில் இருந்து கேரளாவுக்குச் சென்ற பயணிகள் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் சென்னையில் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து கேரளாவின் கோழிக்கோட்டுக்கு 158 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் உட்பட 166 பேருடன் ஏர் ஏசியா விமானம் புறப்பட்டது.
விமானம் சென்னைக்கு மேலே இரவு 11.50 மணிக்கு பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு இருப்பதை விமானி கவனித்தார். இதைத் தொடர்ந்து, விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு விமானத்தை சென்னையில் தரையிறக்க அனுமதி கோரினார்.

கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர். பின்னர், விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, விமானம் அதிகாலை 12.10 மணிக்கு சென்னையில் தரையிறங்கியது.
பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டு சென்னை விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறை பொறியாளர்கள் குழு சரிசெய்தது. விமானம் நேற்று மாலை சென்னையில் இருந்து கோழிக்கோட்டுக்கு புறப்பட்டது.