குமுளியில் தமிழக எல்லையை ஒட்டிய விண்ணேற்றிபாறை என்ற இடத்தில் கண்ணகி கோயில் உள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க கோவிலுக்கு தமிழ்நாடு மற்றும் கேரளா வழியாக இரண்டு தனித்தனி வழிகள் உள்ளன. லோயர் கேம்ப் பளியங்குடியிலிருந்து 6.6 கி.மீ தூரம் காட்டுப் பாதையில் நடந்து செல்லலாம்.

அதேபோல், குமுளியில் இருந்து 14 கி.மீ., தொலைவில் உள்ள கொக்கரகண்டம் வழியாகவும் ஜீப்பில் செல்லலாம். இக்கோயில் வனப்பகுதியில் அமைந்துள்ளதால், சித்திரை மாத பௌர்ணமி நாளில், ஒரு நாள் மட்டும் இங்கு திருவிழா நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா மே 12-ம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான கொடியேற்று விழா இன்று காலை 10 மணிக்கு பளியன்குடியில் நடைபெற உள்ளது. எனவே, நேர்த்திக்கடன் செலுத்தி விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கலாம் என மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.