பொள்ளாச்சி : பொள்ளாச்சியின் மிகப்பெரிய மார்க்கெட்டாக கருதப்படும் காந்தி மார்க்கெட்டிற்கு ஆண்டுதோறும் மாம்பழம், தர்பூசணி, பலா, அன்னாசி, கரும்பு ஆகியவை சீசனுக்கு ஏற்ப விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவக்கத்தில் இருந்தே தர்பூசணிகளின் வரத்து அதிகமாக உள்ளது. தற்போதும் வெளி மாவட்டங்களில் இருந்து லாரி மற்றும் டெம்போக்களில் கொண்டு வரப்படும் தர்பூசணிகளை மொத்த விலைக்கு வெளியூர் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில் தற்போது சந்தைக்கு மாம்பழங்கள் வரத் தொடங்கியுள்ளன. இந்த சீசன் ஜூன் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாம்பழங்களின் வரத்து குறைந்தாலும், கேரளாவில் இருந்து மாம்பழங்கள் அதிக அளவில் கொண்டு வரப்படுகின்றன. இதில், கேரளாவில் இருந்து செந்தூரம், அல்போன்சா, பங்கனப்பள்ளி, மல்கோவ், குந்தா, இமாம்ம்பசந்த், மல்லிகா உள்ளிட்ட மாம்பழங்களின் வரத்து அதிகமாக உள்ளது.
கடந்த சில நாட்களாக, முதல் நிலை மாம்பழங்களாக, டன் கணக்கில் மாம்பழங்கள் சந்தைக்கு வந்துள்ளன. இவற்றை மொத்தமாகவும், சில்லரையாகவும் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக, திருப்பூர், ஈரோடு, கோவை பகுதிகளில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர். தமிழ் புத்தாண்டு (14-ம் தேதி) நெருங்குவதால் மாம்பழங்களின் வரத்து மேலும் அதிகரித்து அதிக விலைக்கு விற்கப்படும் என மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.