சென்னை: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுதந்திர போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகள் உள்ளிட்டோர் தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்களில் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதி வழங்கப்பட்டு பஸ்களில் பயணம் செய்கின்றனர்.
வயது முதிர்வு காரணமாக தனியாகப் பேருந்தில் பயணம் செய்ய முடியாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகைகள் குறித்து 2010, 2020, 2023-ம் ஆண்டுகளில் அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், 1.6.2024 முதல் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் இணையதளம் மூலம் இலவச பயணச் சலுகையை வழங்குகிறது. மேற்கண்ட பயனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை நடத்துநர்கள் சரியாக பின்பற்றுவதில்லை என தெரிகிறது.
எனவே, எதிர்காலத்தில் பயணிகள் சிரமமின்றி பஸ்சில் பயணம் செய்யும் வகையில், அனைத்து போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் டிரைவர்கள்/ கண்டக்டர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இனி வரும் காலங்களில் பயனாளிகள் சிரமமின்றி பேருந்தில் பயணிக்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.