தஞ்சாவூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய 24 வது மாநாடு ஏப்ரல் 2 முதல் 6ஆம் தேதி வரை மதுரையில் நடைபெற உள்ளது. இதையொட்டி ராஜகுரு, பகத்சிங், சுகதேவ் நினைவு தினத்தில், தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை செந்தொண்டர் அணி வகுப்பு நடைபெற்றது.
மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.அருளரசன் தலைமையில், 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற செந்தொண்டர் அணிவகுப்பை, மாநிலக்குழு உறுப்பினரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான நாகை.மாலி துவக்கி வைத்தார். பின்னர், பழைய பேருந்து நிலையம் அருகே செந்தொண்டர் அணிவகுப்பை நிறைவு செய்து வைத்து, அகில இந்திய மாநாடு குறித்து சிறப்புரையாற்றினார். “கூடிக் கலைகிற மாநாடுகளைத் தான் பெரும்பாலான அரசியல் கட்சிகள் சடங்குகளாக நடத்துகின்றன. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தி, பிரதிநிதிகள் கருத்துக்களை கேட்டறிந்து ஜனநாயகபூர்வமான முறையில் நடத்துகிறது. அரசியல், பொருளாதாரம்,
மக்கள் வளர்ச்சிக்கான திட்டங்களை விவாதித்து முடிவெடுக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாட்டில் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். தியாகிகள் ராஜகுரு, சுகதேவ், பகத்சிங் நினைவு தினத்தில் இந்த செந்தொண்டர் அணிவகுப்பு நடைபெற்றது. கொட்டும் மழையிலும் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாநிலக்குழு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். நிறைவாக செந்தொண்டர் அணி ஒருங்கிணைப்பாளர் சந்துரு நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில், மூத்த தலைவர் என்.சீனிவாசன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், சி.ஜெயபால், பி.செந்தில்குமார், என்.சரவணன், ஆர்.கலைச்செல்வி, மாவட்டக்குழு உறுப்பினர் என்.குருசாமி, மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.ஏசுராஜா, மாணவர் சங்கம் சந்துரு, மற்றும் பல்வேறு அரங்கத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
கும்பகோணத்தில் இருந்து வந்திருந்த 6 வயது சிறுவன் நகுலன் செந்தொண்டர் அணிவகுப்பில் மிடுக்காக நடை போட்டு வந்தது அனைவரையும் கவர்ந்தது.