மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் நடிகர் விஜய், பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக விமர்சித்தார். “மாண்புமிகு பிரதமர் மூன்றாவது முறை ஆட்சியில் இருக்கும்போது மக்களுக்கு நன்மை செய்வீர்களா? மீனவர்களை காக்க கச்சத்தீவை மீட்டுத் தருவீர்களா? நீட் தேர்வை ரத்து செய்வீர்களா?” என கேள்விகளை முன்வைத்தார். மேலும் “தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது; தமிழக மக்கள் ஒட்டுவார்களா?” என சாடினார்.

இதேநேரத்தில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விஜய்யின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார். “யாரோ ஒரு நடிகை கல்யாணத்துக்கே தனி விமானத்தில் சென்றார், அந்த மாதிரி விமான நிலையங்களை உருவாக்கியது பிரதமர் மோடி தான்” எனக் கூறினார்.
அவர் மேலும், “ஒரு மாநாட்டை ஒழுங்காக நடத்த முடியவில்லை, அடுத்த முதல்வர் என்கிறார். பிரதமர் இன்று உலக அளவில் மதிப்பைப் பெற்றுள்ளார். மிஸ்டர் பி.எம். என யாராவது சொன்னால் யாரும் ரசிக்க மாட்டார்கள். அவர் மாஸ்டர் பி.எம். ஆக உள்ளார்” எனக் கடுமையாக விமர்சித்தார்.
தமிழிசை, “விஜய் அரசியலில் புதியவர். அவருடைய வசனங்களை எழுதிக் கொடுப்பவர்களிடமிருந்தே அவர் வாசிக்கிறார். பாஜக கூட்டணி எப்படியிருக்கும் என்பதை அவருக்கு என்ன தெரியும்? கச்சத்தீவை பற்றிய பேச்சே அவருக்கு அரசியல் ஞானம் இல்லை என்பதற்குச் சான்று” எனக் குறிப்பிட்டார்.
இதனிடையே, பாஜக தாமரை சின்னம் தமிழகத்தில் மலரும், அப்போது விஜய் அதை பார்த்தே தீர்வார் என்றும் தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.