தொலைதூர மற்றும் ஆன்லைன் படிப்புகளுக்கான அங்கீகாரம் பெற உயர்கல்வி நிறுவனங்கள் ஏப்ரல் 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு:-
நடப்பு கல்வியாண்டில் (2025-26) ஜூன் செமஸ்டர் சேர்க்கைக்கான தொலைதூரப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி, யுஜிசி விதிமுறைகளின்படி முழுமையான உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட உயர்கல்வி நிறுவனங்கள் தொலைதூர மற்றும் ஆன்லைன் படிப்புகளை கற்பிப்பதற்கான அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அதன்படி, தகுதியான கல்வி நிறுவனங்கள் /deb.ugc.ac.in/ என்ற இணையதளம் மூலம் ஏப்ரல் 3-ம் தேதிக்குள் அவசரமாக விண்ணப்பிக்க வேண்டும்.

அதன்பிறகு, கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தின் நகலை உரிய ஆவணங்களுடன் டெல்லியில் உள்ள யுஜிசி தலைமையகத்துக்கு ஏப்ரல் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். தொடர்புடைய விதிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை மேலே உள்ள இணையதளத்தில் காணலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.