சென்னை: ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளை, அஜிலீசியம் டேட்டா இன்னோவேஷன்ஸ் நிறுவனத்துடன் லைஃப் சயின்ஸ் மற்றும் ஹெல்த் துறைகளில் கூட்டு ஆராய்ச்சியை மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் வி.காமகோடி முன்னிலையில், ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளையின் தலைமை இயக்க அதிகாரி ஜி.வீரராகவன் மற்றும் அஜிலீசியம் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ராஜ்பாபு ஆகியோர் ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர்.
ஒப்பந்தத்தின்படி, இரு நிறுவனங்களும் வாழ்க்கை அறிவியல் மற்றும் ஆரோக்கியத்தில் கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபடும். ஐஐடியின் கிராமப்புற தொடர்பு மையங்கள் மூலம் தரமான கல்வி, தகவல் தொழில்நுட்ப அறிவு மேம்பாடு மற்றும் உள்ளூர் மக்களின் அறிவு அடிப்படையிலான அதிகாரமளித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். அஜிலீசியம் சமூக பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் புதுமையான தீர்வுகள் பற்றிய கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபடும். இது தரவு பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் பணியை மேம்படுத்தும் என ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.