சென்னை: பூந்தமல்லியில் இருந்து போரூர் வரையிலான 9.1 கி.மீ., துாரத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் 3 வழித்தடங்களில் ரூ. 63,246 கோடியில் 116.1 கிமீ நீளத்தில் செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடங்களில் மொத்தம் 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில், கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி செல்லும் 4-வது வழித்தடம் (26.1 கி.மீ.) ஒன்றாகும்.
கலங்கரை விளக்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை ஒரு சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்த்தப்பட்ட சாலையாகவும் உள்ளது. தற்போது பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை மற்றும் மேம்பாலப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, போரூர் – பூந்தமல்லி புறவழிச்சாலை இடையே பல இடங்களில் இன்ஜினியரிங் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் தற்போது உயர்மட்ட பாதை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக தண்டவாளங்கள் அமைக்கும் பணியும், மின்கம்பங்கள் அமைக்கும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.

இந்த வழித்தடத்தின் ஒரு பகுதியாக, பூந்தமல்லி பணிமனை முதல் முல்லை தோட்டம் வரையிலான 2.5 கி.மீ., தூரம் சோதனை ஓட்டம் ஜனவரி 20ம் தேதி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிலையில், பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை ஒற்றையடிப்பாதையில் சோதனை ஓட்டம் ஏப்., 28ல் நடைபெற உள்ளது.இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் கழக அதிகாரிகள் கூறியதாவது: 4வது வழித்தடத்தின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு டிசம்பரில் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயில் சேவையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லியில் இருந்து போரூர் சந்திப்பு வரை ஒற்றையடிப்பாதையில் (மேல்பாதை) தண்டவாளம் அமைக்கும் பணி கடந்த வாரம் நிறைவடைந்தது. தற்போது இந்த வழித்தடத்தில் உயர்மட்ட மின் பாதை அமைக்கும் பணியும் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, பூந்தமல்லி – போரூர் சந்திப்பு (9.1 கி.மீ.) வரையிலான ஒற்றையடிப் பாதையில் திங்கள்கிழமை (ஏப்ரல் 28) மாலை சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. இதில் சென்னை மெட்ரோ ரயில் கழக நிர்வாக இயக்குனர் சித்திக் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் பங்கேற்று ஆய்வு செய்யவுள்ளனர்.
இந்த வழித்தடத்தில் பூந்தமல்லி புறவழிச்சாலை, பூந்தமல்லி, முல்லைத்தோட்டம், கரையான்சாவடி, குமணஞ்சாவடி, காட்டுப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், தெள்ளியகரம், போரூர் பைபாஸ், போரூர் சந்திப்பு ஆகியவை அடங்கும். மற்றொரு வழித்தடத்திற்கான பணி மும்முரமாக நடந்து வருகிறது. என்றனர்.