சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டம் தற்போது 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கட்டம் 2 திட்டத்தில் டிரைவர் இல்லாத ரயிலை பயன்படுத்துவதும் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. பூந்தமல்லி புறவழிச்சாலை மற்றும் கலங்கரை விளக்கம் இடையே உள்ள வழித்தடத்தில் பூந்தமல்லி முதல் முல்லை தோட்டம் வரை 2.5 கி.மீ., தூரத்திற்கு தண்டவாளம் அமைக்கும் பணி முழுமையாக நிறைவடைந்துள்ளது.
எனவே, அந்த வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில் பூந்தமல்லியில் இருந்து முல்லை தோட்டம் வரை நள்ளிரவில் 3 பெட்டிகள் கொண்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த உயர்மட்ட பாதை பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து முல்லை தோட்டம் நிலையம் வரை சுமார் 3 கி.மீ. இது பூந்தமல்லி பணிமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சோதனை மற்றும் செயல்பாட்டிற்கு, பூந்தமல்லி பணிமனை இந்தப் பகுதியில் மெட்ரோ ரயில் சோதனைகளுக்கான ஒருங்கிணைப்பு மையமாக இருக்கும். படிப்படியாக, சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் மெட்ரோ ரயில் பாதை சோதனைகளில் புதிய பிரிவுகளைச் சேர்க்கும், இதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதிசெய்ய ஆரம்ப சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
பூந்தமல்லி – போரூர் இடையே இந்த ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுபற்றி சென்னை மெட்ரோ ரயில் கழக நிர்வாக இயக்குனர் சித்திக் கூறுகையில், ”மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தின் உயர்மட்ட 4 வழித்தடத்தில் நடத்தப்பட்ட முதல் லைன் சோதனை குறிப்பிடத்தக்க சாதனை” என்றார்.