
சென்னை: வங்கக்கடலில் நேற்று உருவான பென்ஜால் புயல் இன்று மதியம் அல்லது இரவு நேரத்தில் காரைக்கால் – புதுச்சேரி அருகே மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் பென்ஜால் புயலின் போதும் இன்று சனிக்கிழமை நேர அட்டவணைப்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை வழக்கம் போல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சனிக்கிழமை கால அட்டவணையின்படி இன்று காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும். காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியிலும், காலை 5 மணி முதல் 8 மணி வரையும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை, இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மெட்ரோ ரயில் சேவை தாமதமின்றி வழக்கம் போல் தொடங்கியுள்ளது. பயணிகள் இந்தச் சேவையைப் பயன்படுத்தி தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக, அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் படிக்கட்டுகளைப் பயன்படுத்தும்போது பயணிகள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கோயம்பேடு மெட்ரோ, செயின்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்று முதல் பயணிகள் வாகனங்களை நிறுத்த வேண்டாம். ஏதேனும் உதவி இருந்தால், 1800 425 1515, மகளிர் ஹெல்ப்லைன் – 155370 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளவும்.