மேட்டூர்: ஜூலை 30-ம் தேதி முதல் முறையாக 120 அடியை எட்டிய மேட்டூர் அணை, 2-வது முறையாக ஆகஸ்ட் 12-ம் தேதி நிரம்பியது. மழை பெய்யாததாலும், பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரித்ததாலும் ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது.
இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து மூன்றாவது முறையாக நேற்று இரவு முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து 16 கேஜ் பாலம் வழியாக உபரி நீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், நீர்மின் நிலையம் மூலம் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
உபரி நீர் திறக்கப்படுவதால், நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை இந்த ஆண்டு மூன்றாவது முறையாக நிரம்பியுள்ளதால் பாசனத்துக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று வரை டெல்டா பாசனத்துக்கு 136 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நேற்று வரை 7 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் இருந்தது. மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால், மேட்டூர் அணையின் உபரி நீர் பாசனத் திட்டத்துக்கு இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது.