மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரால் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12 முதல் ஜனவரி 28 வரை 230 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதன் மூலம் குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு 330 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. அதேபோல், அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து அடிப்படையில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். கேரளா, கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின. பின்னர் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதையடுத்து காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இந்த ஆண்டு, ஜூலை, 30-ல், மேட்டூர் அணை, முதல் முறையாக, தன் முழு கொள்ளளவான, 120 அடியை எட்டியது. இதையடுத்து, ஆகஸ்ட் 12-ம் தேதி மேட்டூர் அணை இரண்டாவது முறையாக 120 அடியை எட்டியது. பின்னர் மழை குறைந்ததாலும், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைய தொடங்கியது. டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், பாசனத்துக்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளதால், தண்ணீர் திறப்பையும் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதே நேரத்தில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதாலும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்து வந்தது. மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 4,266 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று குறைந்து 3,004 கனஅடியாக உள்ளது. டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,000 கன அடியாகவும், கால்வாய் பாசனத்துக்கு 300 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 118.94 அடியில் இருந்து 119.02 அடியாகவும், நீர் இருப்பு 91.78 டிஎம்சியில் இருந்து 91.91 டிஎம்சியாகவும் அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்ட, 0.98 அடி மட்டுமே தேவை, நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.,யை எட்ட, 1.56 டி.எம்.சி., தேவை. தற்போது அணைக்கு நீர்வரத்து மற்றும் நீர் திறப்பு தொடர்ந்தால், ஒரு வாரத்தில் நிரம்ப வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.