மேட்டூர்: மேட்டூர் அணை, இந்த ஆண்டு மூன்றாவது முறையாக இன்று மாலைக்குள் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என நீர்வளத்துறை மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் தெரிவித்தார். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம், மேட்டூர் அணைக்கு, 2,516 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, 2,331 கனஅடியாக இருந்த நிலையில், இன்று, 2,875 கனஅடியாக, சற்று அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 500 கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்துக்கு 300 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
அணையின் நீர்மட்டம் 119.87 அடியில் இருந்து 119.97 அடியாகவும், நீர் இருப்பு 93.26 டிஎம்சியில் இருந்து 93.42 டிஎம்சியாகவும் அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் இன்று மாலைக்குள் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டும். மேட்டூர் அணை 43-வது முறையாக ஜூலை 30-ம் தேதி நிரம்பியது. பின்னர், இந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி 2-வது முறையாக நிரம்பியது. இதையடுத்து, இந்த ஆண்டு மீண்டும் 3-வது முறையாக நிரம்பும் என்பதால், அணை பகுதிகளை நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் இன்று அணையில் ஆய்வு மேற்கொண்டார். அணையின் 16 கதவணை மதகு பகுதி, இடது கரை, வலது கரை, வெள்ளக் கட்டுப்பாட்டு மையம், சுரங்கப்பாதை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அணை முழு கொள்ளளவை எட்டியதும் தண்ணீர் திறப்பது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், நீர்வளத்துறை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆய்வின் போது, சேலம் மேல் காவிரி படுகையில் வட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவக்குமார், மேட்டூர் செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர்கள் செல்வராஜ், மதுசூதனன், அணைக்கட்டு கோட்ட உதவி பொறியாளர் சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் நீர்வள ஆதாரத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் கூறியதாவது:-
மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடி நீர் உள்ளதால் டெல்டா பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் வழங்க முடியும். உபரி நீர் திட்டத்தின் கீழ் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழக அரசு மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இன்று மாலைக்குள் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டும். இவ்வாறு அவர் கூறினார்.