மேட்டூர்: மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை 43-வது முறையாக செவ்வாய்கிழமை மாலை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து மொத்தம் 81,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கர்நாடக அணைகள் நிரம்பியுள்ளன. அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதையடுத்து, காவிரியில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 16ம் தேதி முதல் அதிகரிக்க தொடங்கியது. அப்போது, 43 அடியாக இருந்த நீர்மட்டம் கடந்த 27ம் தேதி 71வது முறையாக 100 அடியை எட்டியது. பின்னர் அணையின் நீர்மட்டம் 110.76 அடியை எட்டியதும் கடந்த 28ம் தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. மேட்டூர் அணை வரலாற்றில் 43வது முறையாக நீர்மட்டம் 120 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, அலாரம் அடிக்கப்பட்டு, மேட்டூர் அணையின் 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 60,000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. உபரி நீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டுள்ளதால், மேட்டூர், பூலாம்பட்டி உள்ளிட்ட காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். கடந்த டிசம்பர் 29, 2022 அன்று அணை 120 அடியாக இருந்தது. இதையடுத்து இன்று மீண்டும் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. 2022க்கு பிறகு மேட்டூர் அணை நிரம்பியது டெல்டா பாசன விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 16 கண் மதகு மூலம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை அறிந்த சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளாக வந்து மேட்டூர் அணையை ஆர்வமுடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.
பாசனத்துக்கு கால்வாய் திறப்பு: இதற்கிடையே, கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க, தமிழக அரசுக்கு, சேலம் எம்.பி., செல்வகணபதி, சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்தின் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மேட்டூர் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று மாலை 4.30 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தண்ணீரை திறந்து வைத்தார். முதற்கட்டமாக பாசனத்திற்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் திறக்கப்பட்ட கால்வாயில் படிப்படியாக வினாடிக்கு 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
டெல்டா பாசனத்துக்கு 21,500 கனஅடி: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக கடந்த 28ம் தேதி வினாடிக்கு 12,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர், திங்கள்கிழமை மாலையில் இருந்து 23,000 கன அடி தண்ணீரும், செவ்வாய்க்கிழமை மாலை முதல் 21,500 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டது. இன்று மாலை அணைக்கு வினாடிக்கு 54,459 கன அடியாகவும், நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் இருந்தது. காவிரி ஆற்றில் 16 கண்மாய்கள் மூலம் 60,000 கனஅடி, நீர்மின் நிலையம் மூலம் 21,500 கனஅடி என மொத்தம் 81,500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன், மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம், சார் ஆட்சியர் பொன்மணி, நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தயாளகுமார், மேற்பார்வை பொறியாளர் ராமலிங்கம், செயற்பொறியாளர் சிவக்குமார், சரபங்கா நீர்நிலை கோட்ட செயற்பொறியாளர் ஆனந்தன், உதவி செயற்பொறியாளர்கள் மதுசூதனன், செல்வராஜ், உதவி பொறியாளர் சதீஷ் மற்றும் பலர் இருந்தனர். தற்போது.