சென்னையில் நாளை முதல் தனியார் பால் நிறுவனங்கள் மீண்டும் விலையை உயர்த்த உள்ளன. இதற்கு எதிராக, பால் விற்பனை விலையை கட்டுப்படுத்தும் சிறப்பு சட்டம் இயற்றிட மத்திய, மாநில அரசுகளை பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அமுல் நிறுவனம் பால் விலையை குறைத்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்கள், பால் மற்றும் தயிர் விலையை உயர்த்தி வருகின்றன.
பிப்ரவரி 1 முதல் திருமலா பால் நிறுவனம், பிப்ரவரி 3 முதல் ஜெர்சி பால் நிறுவனம், பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு 2-5 ரூபாய் வரை உயர்த்த உள்ளன. பல்வேறு வகையான பால் மற்றும் தயிருக்கு விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேநீர், காபி, பால் சார்ந்த உணவுப்பொருட்களின் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது.

இந்த விலை உயர்வுக்கு, பால் கொள்முதல் விலை உயர்வு காரணம் என கூறப்படுகிறது. ஆனால், கோவிட் ஊரடங்கு காலத்தில் விலை குறைத்த தனியார் நிறுவனங்கள், தற்போது லாப நோக்கில் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Pதமிழ்நாட்டில் தினசரி உற்பத்தியாகும் 2.25 கோடி லிட்டர் பாலில், ஆவின் பங்களிப்பு 16% மட்டுமே. மீதமுள்ள 84% பங்களிப்பு தனியார் நிறுவனங்களிடம் இருப்பதால், அவர்கள் கட்டுப்பாடின்றி விலையை நிர்ணயிக்கின்றனர். இதை தடுக்கும் வகையில், தனியார் பால் நிறுவனங்களை கண்காணிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.