விருதுநகர்: மழை வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார். விருதுநகர் அருகே நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
டெல்டா மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகங்களுக்கு, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விளம்பரம் மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டால் மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு இடங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளோம். மக்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் இந்த அரசு செயல்படும்.
ராமநாதபுரத்தில் மழையால் சேதமடைந்த படகுகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக ஆட்சியர் மூலம் முதல்வருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ராமநாதபுரம், ராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் உள்ள தண்ணீரை முழுமையாக வெளியேற்ற அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றார்.