சென்னை: மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார். இன்றைய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் மேட்டூர் அணை திறப்பு மற்றும் தூர்வாருவது குறித்து அதிமுக எம்எல்ஏ காமராஜ் கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.

அதில், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்களில் சேறும் சகதியுமாக உள்ளது. 12 மாவட்டங்களில் உள்ள 5,021 கிலோமீட்டர் பாசன கால்வாய்களில் முன்னுரிமை அடிப்படையில் தூர்வார முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு தூர்வாரும் பணிகளுக்கு 98 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள். மே மாத இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.