சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மனைவி மற்றும் மகன்களை விடுவித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருவாய்த்துறை, சட்டம், சிறைத்துறை அமைச்சராக இருந்தபோது ஐ.பெரியசாமி, அவரது மனைவி பி.சுசீலா, தற்போதைய பழனி திமுக எம்.எல்.ஏ.வும் மகனுமான பி.செந்தில்குமார், மற்றொரு மகன் பி.பிரபு ஆகியோர் மீது 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சொத்து குவித்ததாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் 2012-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர்.

திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்த விசாரணை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி, திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புக் காவல் துறை 2018-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் கூறுகையில், ‘எங்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை.
எங்கள் சொத்துக்களை சரியாக கணக்கிடாமல் எங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அவர்களை வழக்கில் இருந்து விடுவித்த திண்டுக்கல் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது. விசாரணை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழு வாதிட்டதுடன், முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகை குறித்தும் விளக்கமளித்தது.
அனைத்து தரப்பு வாதங்களுக்குப் பிறகு தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமார், பிரபு ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்தார். மேலும், திண்டுக்கல் மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான சிறப்பு நீதிமன்ற விசாரணை வழக்குகளை இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தினமும் விசாரணை நடத்தி 6 மாதத்தில் முடிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.