சென்னை: சென்னை மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கை 20ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- சென்னை மாநகராட்சி மண்டலங்கள் 20 ஆக உயர்த்தப்பட்ட நிலையில், அமைச்சர் கே.என். நேரு அதை அமல்படுத்துவது தொடர்பாக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன. 15 மண்டலங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில் மாநகராட்சி மண்டலங்களுக்கு உட்பட்ட நிர்வாகப் பகுதிகளின் தற்போதைய மக்கள் தொகை, வாக்காளர் பட்டியல், சாலைப் பட்டியல், சாலை அடர்த்தி, வரி மதிப்பீடுகள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாக எல்லைகளை மாற்ற அரசு முடிவு செய்தது.
இதையடுத்து, மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கையை, 20 ஆக உயர்த்தி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பிப்.,28-ல் அரசாணை வெளியிட்டது. அதன்படி, ஏற்கனவே செயல்பட்டு வந்த மணலி மண்டலம் அகற்றப்பட்டு, அதன் பகுதிகள், திருவொற்றியூர், மாதவரம் மண்டலங்களுடன் இணைக்கப்பட்டது. அதன் பிறகு மேலும் 6 புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மண்டல நிர்வாக எல்லை மாற்றம், புதிய மண்டலங்களுக்கு அலுவலக கட்டடம், பணியாளர் நியமனம், புதிய 6 மண்டலங்களுக்கு மண்டலக்குழு தலைவர்கள் மறைமுக தேர்தல், 6 புதிய மண்டலங்களை உருவாக்கி மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் நடப்பு செலவுகள், அவற்றை சமாளிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்.
இது தொடர்பாக, மாநகராட்சி எல்லைக்குட்பட்ட எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மண்டலக் குழுத் தலைவர்களுடனான கலந்துரையாடல் கூட்டம், நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என்., நேரு தலைமையில் விரைவில் நடைபெற உள்ளது. கூட்டம் நடைபெறும் தேதி, நேரம், இடம் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.