சென்னை: ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும் திமுக துணை பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய இடங்களில், அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் நடத்திய சோதனை சனிக்கிழமை 11 மணி நேரத்திற்குப் பின் நிறைவு பெற்றது.
அதிகாலை தொடங்கிய இந்த சோதனையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள வீட்டில் இருந்து பல கோப்புகள், டிஜிட்டல் சாதனங்கள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகள் அவற்றை டிஜிட்டல் ஆவணமாக்கி எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், ஒரு அதிகாரி சூட்கேஸில் ஆவணங்களுடன் வீட்டிலிருந்து வெளியேறிய காட்சி வெளியாகியுள்ளது.

சோதனை நடைபெற்ற இடங்கள்:
- சென்னை: பசுமை வழிச்சாலையில் உள்ள வீடு, சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதி அறை.
- திண்டுக்கல்: துரைராஜ் நகரில் உள்ள வீடு, சீலப்பாடியில் உள்ள மகன் ஜே.பி.செந்தில்குமார் வீடு.
- சிவாஜி நகர்: மகள் இந்திராணி வீடு.
மேலும், அமைச்சர் ஐ.பெரியசாமியின் கார் மற்றும் அவரது மகன் பயன்படுத்தும் வாகனங்களிலும் ED சோதனை நடத்தியது.
பாதுகாப்பு & அரசியல் பரபரப்பு
சோதனை நடைபெற்ற இடங்களில் ஆயுத போலீசார் பாதுகாப்பு வழங்கினர். வீட்டின் வெளியே திமுக தொண்டர்கள் திரண்டு, ஈடீ ரெய்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா நடத்தினர்.
பணமோசடி வழக்கில் விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக ED வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, சில இடங்களில் அமைச்சரின் வீட்டில் மர்மமாக பூட்டப்பட்ட அறைகளையும் அதிகாரிகள் திறந்து சோதனை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சோதனை நிறைவடைந்த நிலையில், கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் சாதனங்கள் விசாரணைக்காக டெல்லி தலைமையகத்திற்கு அனுப்பப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.