தஞ்சாவூர்: மாநில அளவிலான கூடை பந்து போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பெற்ற தஞ்சாவூர் பள்ளி மாணவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் .
பள்ளி கல்வித்துறை சார்பில் தேனி மாவட்டத்தில் மாநில அளவிலான 14 வயதுக்கு உட்பட்டோருக்கான குடியரசு தின கூடைப் பந்து போட்டி கடந்த பிப்ரவரி 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 40 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.
இதில் தஞ்சாவூர் தூய வள்ளனார் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டியில் தகுதி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவிகள் நேற்று பள்ளிக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் மாணவிகளை நேரில் வரவழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட், பள்ளி தாளாளர் பூங்கோதை, பள்ளி தலைமை ஆசிரியை அல்போன்ஸ் மேரி, மற்றும் உடற்கல்வி ஆசிரியை ஏஞ்சல், பயிற்சியாளர் ராஜுவ் ஆகியோர் பங்கேற்றனர்.