சென்னை: தமிழகத்தில் இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை 35 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று பதிலளித்து பேசியதாவது:-
தமிழகத்தில் தற்போது 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் எண்ணிக்கையை 35 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
மேலும், நகர்ப்புறங்களில் ஒரு கிலோமீட்டருக்குள்ளும், கிராமப்புறங்களில் 3 கிலோமீட்டருக்குள்ளும் இ-சேவை மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் கேபிள் டிவி செயல்பாடு குறைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அதற்கு காரணம் அ.தி.மு.க. தான். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் போன்ற மோசமான நிலையில் இருந்த நிறுவனத்தை இதுவரை நான் பார்த்ததில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கிட்டத்தட்ட திவாலானது.
இந்நிறுவனம் ரூ.575 கோடி நிலுவைத் தொகையை வைத்திருந்தது. கேபிள் ஆபரேட்டர்களிடம் இருந்து ரூ.270 கோடி நிதி வசூலிக்கப்படவில்லை. மேலும் ரூ.170 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் நிலுவைத் தொகை ரூ.471 கோடியாக குறைந்துள்ளது. தற்போது சீரிஸ் எச்டி செட் பாக்ஸ் போன்ற புரோகிராம்களை அறிமுகம் செய்து வருகிறோம்.
இந்நிலையில், குற்றச்சாட்டுகளுடன் அறிக்கை வெளியிடுவது அரசியல் கபடத்தனமாகவே கருதுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துறைவாரியான அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படும். அவற்றின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை பெருங்குடியில் 3.6 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.
தமிழ்நாடு புவியியல் தகவல் அமைப்பு மூலம் ரூ.15 கோடி செலவில் மாநிலம் தழுவிய புவியியல் வரைபடம் உருவாக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு கல்லூரிகள் மற்றும் இதர அரசு நிறுவனங்களுக்கு குறைந்த கட்டணத்தில் அதிவேக இணையதள வசதி வழங்கப்படும்.
இது தவிர தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் சந்தாதாரர்களுக்கு குறைந்த கட்டணத்தில் இணையதள தொலைக்காட்சி சேவைகள் வழங்கப்படும். வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு ஆழ்நிலை தொழில்நுட்பக் கொள்கை இந்த ஆண்டு உருவாக்கப்பட்டு வெளியிடப்படும்.
பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ கல்லூரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்ட 16 சேவைகள் வழங்கப்பட உள்ளன.
மேலும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச தமிழ் கணினி மாநாடு நடத்தப்படும் என்பது உட்பட 14 அறிவிப்புகள் அதில் வெளியிடப்பட்டுள்ளன.