திருப்பதி: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 1.77 கோடி பேருக்கு ஜனவரி 10-ம் தேதிக்குள் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என நேற்று திருப்பதி வந்த தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிவித்தார். திருப்பதி காந்தி சாலையில் புதுப்பிக்கப்பட்ட கோ-ஆப் டெக்ஸ் கைத்தறி விற்பனை நிலையத்தை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
தமிழக அரசின் கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்கள் தமிழகம் மட்டுமின்றி நமது அண்டை மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 150 விற்பனை நிலையங்கள் உள்ளன. இது தவிர ஆந்திராவில் 8 விற்பனை நிலையங்களும், தெலுங்கானாவில் 3 விற்பனை நிலையங்களும் உள்ளன. இவை காலத்திற்கு ஏற்ப புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. தற்போது அதை லாபகரமாக சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
காலத்துக்கு ஏற்ப இன்றைய இளைஞர்களை கவரும் வகையில் டிசைன்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகைக்காக 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் புடவைகள், 1 கோடியே 22 லட்சம் வேட்டிகள் தயாரித்து வழங்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதில் இதுவரை 51 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. ஜனவரி 10ம் தேதிக்குள் தமிழகத்தில் அனைவருக்கும் இலவச சேலைகள் மற்றும் வேட்டிகள் வழங்கப்படும்.
எங்களுக்கு கிடைக்கவில்லை என யாரும் புகார் தெரிவிக்காத வகையில், ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்கப்படும். கடந்த 31 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ம் தேதி திருமலைக்கு வருகிறேன். ஜனவரி 1-ம் தேதி திருப்பதி ஏழுமலை யானையை தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். இவ்வாறு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் எம்எல்ஏ ஆரணி சீனிவாசலு, முன்னாள் எம்எல்ஏ சுகுணம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.