ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், காரைக்குடி மண்டலம் மூலம் புதிய பிஎஸ்-6 ரக பேருந்துகள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 28) நடைபெற்றது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், பரமக்குடி எம்.எல்.ஏ செ.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாயல்குடி முதல் சிதம்பரம் வரையிலும், ராமநாதபுரம் முதல் ராமேசுவரம் வரையிலும், ஏர்வாடி முதல் ஈரோடு வரையிலும், ராமேசுவரம் முதல் திருச்சி வரையிலும் (இரண்டு பேருந்துகள்), முதுகுளத்தூரிலிருந்து சிதம்பரம் வரையிலும், சாயல்குடியிலிருந்து திருப்பூர் வரையிலும் என ஏழு புதிய பிஎஸ்-6 ரக பேருந்துகளை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறியதாவது, ”தமிழகத்தில் 7000 புதிய பிஎஸ்-6 ரக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்பொழுது பரமக்குடியிலிருந்து 7 புதியபேருந்துகள் இன்று துவக்கி வைக்கப்படுகின்றன. இதேபோல் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் புதிய ரக பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.”