அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் முள்ளுக்குறிச்சி கிராமத்தில் இருந்து கடலூர் மண்டலம் சார்பில் சென்னைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் பொ.ரத்தினசாமி முன்னிலையில், புதிய வழித்தட பேருந்தை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- கடந்த ஆண்டு தீபாவளி பயணத்திற்கு அரசு பஸ்களில் 1,10,000 பேர் முன்பதிவு செய்தனர். இந்த ஆண்டு நேற்று வரை 1,42,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். அரசு போக்குவரத்து கழகங்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பதிவு இல்லாமல் பயணிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், அதற்கேற்ப பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
நேற்று மட்டும் சென்னையில் இருந்து 1 லட்சத்து 10 ஆயிரத்து 750 பேர் பஸ்களில் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இன்றும் நாளையும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயுதபூஜை விடுமுறையையொட்டி தனியார் ஒப்பந்தப் பேருந்துகள் ஏற்கனவே சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டன.
கோரிக்கைக்கு ஏற்ப, தனியார் ஒப்பந்தப் பேருந்துகள் அரசு வழங்கும் டிக்கெட்டுகளுடன் அரசு கட்டணத்தில் இயக்கப்படும். அதில் அரசு அதிகாரி ஒருவர் பயணம் செய்வார். அரசு ஒப்பந்த வாகனம் என்ற பெயரில் அவை இயக்கப்படும். கடந்த ஆண்டை விட தற்போது முன்பதிவு செய்யப்பட்டுள்ள பயணிகள் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தேவைப்பட்டால் மேலும் அதிகரிக்கவும். ரெட் பஸ் ஆப் மூலம் தனியார் பஸ்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசு சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். பயணிகளிடம் புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
கூடுதல் கட்டணம் வசூலித்தால், அது பயணிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆப்ஸ் மூலம் விற்கப்படும் பயணச்சீட்டுகள் குறித்து புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.