சென்னை: மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்காக வாங்கப்பட்ட 25 தாழ்தளப் பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மற்றும் ஜெர்மன் துணைத் தூதரக மைக்கேலா குச்லர் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு 352 தாழ்தளப் பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், இன்று வரை ரூ.170.60 கோடியில் 188 தாழ்தளப் பேருந்துகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக 25 பேருந்துகள் ரூ.22.69 கோடி மதிப்பீட்டில் ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் வாங்கப்பட்டுள்ளன.
இதன் வெளியீட்டு விழா சென்னை பல்லவன் சாலையில் இன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், ஜெர்மன் துணை கான்சல் மைக்கேலா குச்லர் ஆகியோர் கலந்து கொண்டு பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் உட்பட அனைவரும் பஸ்சில் சிறிது தூரம் பயணம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் மைக்கேலா குச்லர் பேசுகையில், நான் தொடர்ந்து நகரப் பேருந்துகளில் பயணிப்பேன்.
பெண்களுக்காக இங்கு அறிவிக்கப்பட்டுள்ள இலவச பயணச் சேவையை பெண்ணியக் கண்ணோட்டத்தில் பாராட்டுகிறேன். மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைவரின் நலனுக்காகவும் தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
5சி வழித்தடத்தில் தாழ்தளப் பேருந்துகளை இயக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர் கூறினார். மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறுகையில், ”சுற்றுச்சூழலுக்கு உகந்த பஸ்களை இயக்க, ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன், 7,492 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 5 கட்டங்களாக திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதில், போக்குவரத்துக் கழகங்களுக்காக 2,213 பிஎஸ்6 டீசல் பஸ்கள், 500 எலக்ட்ரிக் பஸ்கள், 552 லோ ஃப்ளோர் பஸ்கள் வாங்கப்படுகின்றன. பேருந்துகள் வாங்குவது மட்டுமின்றி, தகவல் தொடர்பு தொழில்நுட்பத்திற்கான நவீன மென்பொருளை உருவாக்குதல், ஓட்டுநர்களுக்கு நவீன தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்வதற்கான பயிற்சி ஆகியவையும் இந்த திட்டத்தில் அடங்கும்,” என்றார்.
இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறைச் செயலர் க.பனீந்திர ரெட்டி, ஜெர்மன் வங்கி இந்தியா நாட்டு இயக்குநர் உல்ஃப் முத், மூத்த போக்குவரத்து நிபுணர் சுவாதி கண்ணா, மாநகரப் போக்குவரத்துக் கழக இணை நிர்வாக இயக்குநர் நடராஜன், சாலைப் போக்குவரத்துக் கழக இயக்குநர் சு.ரங்கநாதன், போக்குவரத்து நிதிக் கழக இணை நிர்வாக இயக்குநர் வெங்கட் ராஜன், தொமுச பொருளாளர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.