சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டுனர் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, சென்னையில் இன்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் காலை 7 மணியளவில் சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. அதனை தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் இதமான சூழ்நிலையில் இருந்தது வந்தது.
இதனை தொடர்ந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. அடையாறு, மயிலாப்பூர், அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, எழும்பூர், ஓ.எம்.ஆர். சாலை, சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், குமரன் நகர் மற்றும் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. திடீரென பெய்த மழையால் ஓ.எம்.ஆர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.