சென்னை: தபால் துறையின் பெயரில் நடக்கும் பணப்பட்டுவாடா குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தபால் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, தபால் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
இந்திய தபால் நிலையத்தில் இருந்து பார்சல் அனுப்புவதாக, மோசடி கும்பல், பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புகிறது. முகவரி சரியாக இல்லாததால் பார்சல் டெலிவரி செய்ய முடியாது என தெரிவிக்கப்படும். சரியான முகவரியை உள்ளிடுமாறு கேட்டு மோசடி செய்பவர்கள் இணைப்பை அனுப்புவார்கள்.
அதன் பிறகு போஸ்ட் ஆபீசில் இருந்து பேசுங்கள் என்று அழைப்பு வருகிறது. பார்சல் திரும்பப் பெறப்படுவதைத் தடுக்க, இணைப்பைக் கிளிக் செய்யும்படி கேட்கப்படுவீர்கள்.
இணைப்பைக் கிளிக் செய்தவுடன், நீங்கள் ஒரு போலி வலைத்தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், மேலும் ரூ.80 முதல் ரூ.100 வரை சிறிய தொகையை செலுத்துமாறு கேட்கப்படுவீர்கள்.
நமது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை உள்ளிட்டு, சிறிய தொகை என நினைத்து பணம் அனுப்பியவுடன், மோசடி செய்பவர்கள் நொடிகளில் நமது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கின்றனர்.
அஞ்சல் துறையைப் பொறுத்தவரை, வாடிக்கையாளர்களிடம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களைக் கேட்கவில்லை. மேலும், எதிர்பாராத குறுஞ்செய்திகள், அழைப்புகளின் பின்னணியை விசாரிக்க அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் பராமரிப்பு மையத்தை அணுகவும்.
மேலும், காவல் துறை மற்றும் சைபர் குற்றத் தடுப்புத் துறையிடம் புகார் அளிக்க வேண்டும். எனவே, தபால் அலுவலகம் என்ற பெயரில் வரும் குறுஞ்செய்திகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.